

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே அரசு மேல் நிலைப் பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீர்வரிசை வழங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வெம்பூரில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் நிதி உதவியுடன் வாங்க முடிவு செய்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் டேபிள், நாற்காலிகள், புத்தக அலமாரி, பீரோக்கள், மின் விசிறிகள், தண்ணீர் பாத்திரங்கள், சின்டெக்ஸ் தொட்டி என ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரித்தனர்.
இந்த பொருட்களை சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வழங்குவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கல்வி சீர்வரிசை பொருட்களை மேலாண்மைக்குழு தலைவர் பிரியா, தலைமை ஆசிரியை முத்துமாரியிடம் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, சீனிவாசன், சமூக ஆர்வலர்கள் லட்சுமணன், கண்ணன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், சவுந்திரபாண்டி, ஆசிரியர்கள்துரைப்பாண்டியன், கணேசன், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.