

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் மாணவர்கள் பிரிவில் புனித மரியன்னை பள்ளி முதலிடம் பெற்று சாம்பியன் ஆனது.
21 பள்ளிகள் பங்கேற்பு
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்துக் கழகம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்தின.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அனுமந்தராயன் கோட்டை லயோலா மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அதேபோல், பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தையும், வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 2-வது இடத்தையும் வென்றன.
பரிசளிப்பு
வெற்றிபெற்ற அணியினருக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் பரிசுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.