

உடுமலை: நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் 75 அறிவியல் பரிசோதனைகள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா விடுதலை பெற்று 75-வது ஆண்டு நிறைவையொட்டி, அமுதப் பெருவிழாவாக கடந்த ஓராண்டாக மத்திய அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உடுமலையில் தன்னார்வலர்கள் இணைந்து கலை, கலாச்சாரம், விளையாட்டு, இசை, கட்டுரை, ஓவியம், ஊர்வலம் என 75 நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் அறிவியல் பரிசோதனைகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார், கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தனியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து இந்நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, சுதந்திர தினத்தன்று 75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 நிமிடங்கள் என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் சான்றிதழும், சிறப்பு பரிசும் வழங்கப்படும். மேலும், ஆகஸ்ட் 8 முதல் 15-ம் தேதி வரை இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி உடுமலை தேஜஸ் மஹாலில் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘இந்தியாவை 2047-இல் வல்லரசாக்க என் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரை, ஓவியப்போட்டி, கனவு இந்தியா 2047 என்ற தலைப்பில் முழக்கம் (ஸ்லோகன்) எழுதும் போட்டிகள் வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி அளவில் உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெறும்.
போட்டிகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்களும், பொதுமக்களும் 8778201926 என்ற எண்ணிலும், udt75eventsceleb@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு கண்ணபிரான் கூறினார்.