

விழுப்புரம்: மாணவர்களுக்கு பாடத்துடன் நாட்டுநடப்புகள் மற்றும் சமுதாய கருத்துகளையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
விழுப்புரம் அருகே வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டி.மோகன், எம்.எல்.ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. நாம் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாட இருக்கிறோம். இப்பள்ளியும் இந்த ஆண்டு 75-வது ஆண்டை கொண்டாடுகிறது. கடந்த 1969-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வளவனூரில் மகளிர் பள்ளி தனியாக கொண்டு வரப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகள் சமுதாய உணர்வு பெற வேண்டும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும், வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும், தாங்கள் படிக்கின்ற படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ரூ.1000 உதவித்தொகை
அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தார். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்போது மாணவர்களுக்கு நாள்தோறும் நடைபெறும் நாட்டு நடப்புகள், சமுதாயக் கருத்துக்கள், வரலாறு தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.
இதன் மூலமாகவே தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகள் பாதுகாக்கப்படுவதோடு இளம் தலைமுறையினர் வாயிலாக அடுத்து வரும் சந்ததியினருக்கு நம் தமிழகத்தின் பெருமைகள் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட் டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் வளவனூர், கண்டமங்கலம் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 18 பள்ளிகளில் 1,589 மாணவர்கள் 1,445 மாணவிகள் என 3,304 பேருக்கு அமைச்சர் பொன்முடி சைக்கிள்கள் வழங்கினார்.