

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் பங்களிப்புடன் செயற்கை முப்பரிமாண கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடும் ‘போலாம் ரைட்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த வாரம் கொடிசியா வர்த்தக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் செயல்பட்டுவரும் அறிவியல் மையத்துக்கு சிறப்பு கருவிகளும், தொலைநோக்கியும் தேவைப்படுவதாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில், அதற்குரிய சாதனங்கள் வாங்க ரூ.59,000/-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் பள்ளி மாணவிகளிடம் நன்கொடையாளர்கள் வழங்கினர். மேலும், கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் செயற்கை முப்பரிமாண கருவிகளை மாணவர்களுக்கு ஆட்சியர் சமீரன் வழங்கினார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பேராசிரியர் சக்திவேல், ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முப்பரிமாண கருவியின் பயன் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்ததும் நாம் இருக்கும் நிஜ உலகம் நம் கண்ணிலிருந்து மறைந்துவிடும். அந்தக் கண்ணாடி வழியே புதிய டிஜிட்டல் உலகம் நம் முன்உருவாகும். நிலவில் நடப்பது, விண் ணில் பறப்பது, சூரியன் தோன்றி,மறைவது உள்ளிட்ட பல அறிவியல் விஷயங்களை முப்பரிமாண வீடியோக்கள் மூலம் மாணவர்கள் உணர முடியும்” என்று தெரிவித்தனர்.