

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் பகுதியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு தற்காப்புக்கலையான டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருமருகல், திருப்புகலூர்,கணபதிபுரம், ஏர்வாடி, திருக்கண்ண புரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் மூலம் தற்காப்பு கலையான டேக்வாண்டோ பயிற்சி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்தது.
கரோனா பெருந்தொற்று பாதிப்புகாரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கரோனா பாதிப்புகள் குறைந்து பள்ளிகள் முழுமையாக செயல்படத்தொடங்கிவிட்ட நிலையில், நாகைபகுதி அரசு பள்ளி மாணவ, மாணவி களுக்கு மீண்டும் டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை அன்று டேக்வாண்டோ பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலாராணி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பி.சங்கர் முன்னிலை வகித்தார். பயிற்சியில், ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதுகுறித்து, டேக்வாண்டோ பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியன் கூறுகையில், ‘‘மாணவ, மாணவிகள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளவே தற்காப்புக்கலையான டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப் படுகிறது டேக்வாண்டோ பயிற்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்" என்றார்.