ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 30 இடங்களை பிடித்த புதுச்சேரி பாரதிதாசன் அரசு பள்ளி

நவோதயா பள்ளி நுழைவுத்தேர்வுக்காக வீட்டில் பயிற்சி தரும் கூனிச்சம்பேட்டை பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்  சசிகுமார்.
நவோதயா பள்ளி நுழைவுத்தேர்வுக்காக வீட்டில் பயிற்சி தரும் கூனிச்சம்பேட்டை பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார்.
Updated on
1 min read

புதுச்சேரி: ஜவகர் நவோதயா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் கிராமப்பகுதி களுக்கான 60 இடங்களில் புதுச்சேரி கூனிச்சம்பேட்டை பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் 30 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் கிராமப் பகுதி களுக்கான 60 இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

இதில் வழக்கம்போல் புதுச்சேரி கூனிச்சம்பேட்டை பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 60 இடங்களில் 30 இடங்களை இப்பள்ளி மாணவ, மாணவிகள் வென்றுள்ளனர்.

கூனிச்சம்பேட்டை பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சசிகுமார் இதற்கு முக்கியக்காரணம். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கிராமப் பகுதியிலுள்ள குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். தேசிய அளவில் எங்கள் பள்ளி பல விருதுகளை வென்றுள்ளது.

பள்ளி முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும் நவோதயா பள்ளிக்கான நுழைவுத்தேர்வுக்கு எனது வீட்டில் இலவச பயிற்சியை உணவுடன் தருவது வழக்கம். எங்கள் வீட்டுக்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து விடுவார்கள். 2020-ல் 10 குழந்தைகளும், சென்ற ஆண்டில் 27 குழந்தைகளும் தேர்வில் வென்றனர்.

இப்போதுதான் அதிகளவாக மொத்தமுள்ள 60 இடங்களில் 30 இடங்களை எங்கள் பள்ளி குழந்தைகள் வென்று நவோதயாவுக்கு தேர்வாகியுள்ளனர். இதுவரை காலாப்பட்டு நவோதயா பள்ளி வளாகத்தில் எங்கள் பள்ளியில் படித்த 200 குழந்தைகள் தற்போது படிப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி மாநிலத்திலேயே இத்தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மடுகரை எம்.ஆர். சுப்புராயன் அரசுதொடக்கபள்ளியில் படித்த 9 குழந்தைகள் நவோதயாவுக்கு தேர்வாகியுள்ளனர். அப்பள்ளியின் தலைமை யாசிரியர் சீனுவாசன் கூறுகையில், "ஐந்து மாதங்கள் தொடர்ந்து பயிற்சி தந்தோம்.

நவோதயா நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாலும் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 14 பேர் தேர்ச்சி பெற்றுஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதன் அடிப்படையில் இக்கல்வியாண்டில் 270 புதிய மாணவர் சேர்க்கையுடன் மொத்தம் 710 மாணவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர்ருத்ரகவுடு தேர்வில் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகள் அதிகளவில் நவோதயா பள்ளி சேர்க்கைக்கும் பயிற்சி அளித்து மாணவர்களை சேர்க்க முனைப்பு காட்டுவது மக்களிடம் அதிக வரவேற்பு பெற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களால் அசத்த முடியும் என நிரூபித்துள்ள கிராம குழந்தைகளால் பெருமையடைகின்றன அரசு பள்ளிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in