அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து.
Updated on
1 min read

புதுக்கோட்டை: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத் தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசுமேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து பேசியது:

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 7 பட்டதாரி ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிலையில் மாவட்டம் தோறும் ஓர் அதிகாரியை நியமிக்க வேண்டும். அரசின் திட்டங்களை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தடையின்றி கொண்டு செல்வதற்கு கூடுதல் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும்.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தனியாக முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு வழங்க வேண்டும். அலுவலகப் பணிகளை கணினியில் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மடிக்கணினி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாக அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அமைப்பின் மாவட்டத் தலைவராக ம.தங்கராஜ், அமைப்புச்செயலாளராக ஏ.எல் முத்துக்குமார்தேர்வு செய்யப்பட்டனர் மாவட்டச் செயலாளர் நா.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ரா.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in