Published : 19 Jul 2022 06:25 AM
Last Updated : 19 Jul 2022 06:25 AM
சென்னை: நம் நாட்டின் 75-வது சுதந்திர தினநிறைவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினநிறைவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிஆங்கிலம், தமிழில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
பள்ளி மாணவர்கள், ‘நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்’ என்றதலைப்பில், தமிழிலும், ஆங்கிலத் திலும் கட்டுரை எழுத வேண்டும். 10 பக்கங்களுக்கு (ஏ4 தாள்) மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் கட்டுரை இருக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள், "2047-ம் ஆண்டு இந்தியா" என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரைகளை ‘இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை- 600100’ மற்றும் ‘துணைவேந்தர், தமிழ்நாடு எம்ஜிஆர், மருத்துவப் பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-600 032 ’ ஆகிய முகவரிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளை அனுப்பும்போது பெயர், வீட்டு முகவரி, கல்வி நிறுவன முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும்.
பள்ளி அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT