

நாகர்கோவில்: செல்போன் விளையாட்டுகள் வேண் டாம். பொது அறிவு தொடர்பான புத்தகங்கள் படிப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவுரை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக சுதந்திர திருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் வியாழக் கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்துப் பேசும்போது கூறியதாவது:
நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியை எதற்காக அரசு நடத்துகிறது என்பதை மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலக்கட்டங்களில் நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்கள் என்பதை நினைவு கூறும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நமது பாரம்பரிய விளையாட்டு களாக சிலம்பம், களரி, கோ-கோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் போது உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, திறமையும் வெளிப்படும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் பாரம்பரியவிளையாட்டுகளை மறந்து செல் போனில் வரும் விளையாட்டுகளை தொடர்ந்து பார்க்கின்றனர். இதனால், கண்பார்வை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.
நன்றாக படித்து வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் கலந்துரையாடுவதிலும் பொது அறிவு புத்தகங்களை படிப்பதிலும் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும்..
தமிழக அரசால் அறிமுகப்படுத் தப்பட்ட “என் குப்பை எனது கடமை“ என்பதை நாம் உணர்ந்து வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மேயர் மகேஷ் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தசனில் ஜாண், பள்ளியின் முதல்வர் லிஸ்பத், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.