

கோவை: இளம் வயதிலேயே செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு சாதனை களை படைத்து வரும் கோவை பள்ளி மாணவர் அர்னவ் ‘எலான் மஸ்க்தான் எனது ரோல் மாடல்’ என்கிறார்.
கோவை மாவட்டம் கோவைப் புதூரில் வசித்து வரும் சிவராம் – அனுஷா தம்பதியரின் மகன் அர்னவ். இவர் சி.எஸ். அகாடமி பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வருகிறார். சிவராமின் பூர்வீகம் தேனி அருகே உள்ள கம்பம் ஆகும். இவர்களது பூர்வீக தொழில் விவசாயம். இத் தம்பதியர் குழந்தைகளின் கல்விக்காக கோவைப்புதூரில் வசிக்கின்றனர்.
மாணவர் அர்னவுக்கு சிறு வயது முதலே கணினியில், குறிப்பாக ரோபோடிக் துறையில் அதீத ஆர்வம்ஏற்பட்டது. 5-வது வகுப்பு படிக்கும் போதே கணினி கல்வியில் மகனின் ஆர்வத்தை கண்ட சிவராம், ஒரு கணினி பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று, மகனுக்கு சி, சி பிளஸ் பிளஸ் பயிற்சியை கற்றுத் தருமாறு சொன்னார்.
ஆனால் பயிற்சியாளரோ, “இந்த கணினி பயிற்சி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கற்றுத்தரப்படுகிறது. 5-வது வகுப்புபடிக்கும் மாணவனுக்கு இதை கற்றத்தர முடியாது. அப்படியே கற்றுத்தந்தாலும் இந்த வயதில் அவரால் எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது” என்று கூறி மறுத்துவிட்டார்.
ஆனால் சிவராமோ விடுவதாக இல்லை. மகனின் திறமை மீது இருந்த நம்பிக்கையில் கணினி பயிற்சிகளை சொல்லிக்கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் சோதனை முறையில் சி, சி பிளஸ் பிளஸ் பயிற்சியை அர்னவுக்கு கற்றுக்கொடுத்தார். அர்னவின் ஆர்வம், புரிந்து கொள்ளும்விதம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. அந்த பயிற்சியை முழுமையாக கற்று பட்டய சான்றிதழையும் பெற்றார் அர்னவ்.
குறைந்த பட்சம் 6 மாதங்கள் கற்க வேண்டிய இந்த பயிற்சியை வெறும் மூன்றே மாதங்களில் அர்னவ் வெற்றிகரமாக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து வெப் டெவலப்மெண்ட், ஜாவா, பைதான் பயிற்சிகளையும் அடுத்தடுத்து கற்று பட்டய சான்றி தழ்களை பெற்றார். சி.எஸ் அகாடமின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியதால் நவீன தகவல் தொழில்நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்த தொடங்கினார் அர்னவ்.
கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது,மனித அறிவை இயந்திரங்களுக்கு வழங்குவது, இயந்திரங்களையே சுயமாக சிந்திக்க வைத்து, இயந் திரத்தின் விருப்பப்படி பணியாற்ற வைப்பது ஆகியவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையின் முக்கியமான செயல்பாடுகள் ஆகும்.. இந்த துறையில் சிறந்து விளங்க வேண்டுமானால் அந்த நபர் கணித மேதையாகவும், மென்பொருள் வல்லுநராகவும், அதிபுத்தி சாலியாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்டு.
தொடர் சாதனை
ஆனால், அர்னவ் 6-வது வகுப்பு படிக்கும்போது கோவை ஜே.சி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்த செயற்கை நுண்ணறிவு துறை தொடர்பான மாநில கருத்தரங்கில் அறிக்கை சமர்ப்பித்து முதல் பரிசை வென்றார்.
அதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு-போட்டிகளிலும் அர்னவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.
தொடர்ந்து கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி, காருண்யா கல்லூரி, குமரகுரு கல்லூரிகளில் நடந்த கருத்தரங்கு-போட்டிகளில் பங்கேற்று அறிக்கைகள் சமர்பித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் அர்னவ்.
மேலும், கோவை ஸ்கூல் ஆப் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அமைப்பில் இணைந்துள்ள உலகின் முதல் இளம் வயது (11 வயது) மாணவர் என்ற பெயரையும் அர்னவ் தட்டிச் சென்றார். கோவை ரத்தினம் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பல மென்பொருள் நிறுவனத்திற்கு புதிய புதிய புராஜெக்ட்களையும் தயார் செய்து கொடுத்துள்ள அவர். கூகுள் டென்சர் ப்ளோ–வில் (Google Tensorflow) செயற்கை நுண்ணறிவு தொடர்பாக உலக அளவில் நடந்த பயிற்சி வகுப்பிலும் உரையாற்றி இருக்கிறார்.
நிறுவனங்களுக்கு ஆலோசனை
அதுமட்டுமல்ல, இன்போசிஸ் நிறுவனம் இந்திய அளவில் நடத்திய தொழில்நுட்பம் தொடர்பான போட்டியில் 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் முதல் 5 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா நாராயணமூர்த்தியின் பாராட்டையும் அர்னவ் பெற்றார்.
மேலும் ஸ்டார்ட் அப் கல்சர் அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோ சனைகள் வழங்கியுள்ளார். கடந்த வாரம் கோவை சி.ஐ.டி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.
அமெரிக்காவின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணி யாற்ற வாய்ப்பு வந்தபோதும் தனது உயர் கல்வியை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். தடையற்ற இண்டர்நெட் சேவை தொடர்பான தனது இரண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலக அளவில் காப்புரிமை பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அர்னவ்.
தற்போது அவருக்கு 13 வயது ஆகிறது. தொடர் சாதனைகள் குறித்துஅவர் கூறுகையில், “டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்தான் என்னுடைய ரோல் மாடல். அவரைப் போன்று சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். விரைவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நிறுவனத்தை தொடங்க உள்ளேன்.
அதன்மூலம் கணிப்பொறி, மென்பொருள், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், வங்கி, நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.