Published : 12 Jul 2022 06:30 AM
Last Updated : 12 Jul 2022 06:30 AM

மத்திய அரசின் தூய்மைக்கான விருதுகள்: காரைக்கால் மாவட்ட அளவில் 11 பள்ளிகள் தேர்வு

மத்திய அரசின் தூய்மை விருதுகளுக்காக, காரைக்கால் மாவட்ட அளவில் தேர்வான ஒரு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்குச் சான்றிதழ், கேடயம் வழங்குகிறார் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ்.

காரைக்கால்: மத்திய அரசின் ‘ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்’ திட்டத்தின் கீழ் தூய்மைக்கான விருதுகள் பெற காரைக்கால் மாவட்ட அளவில் 11 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம், ‘ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்’ திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் தூய்மைக்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து, விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் இந்தவிருதுக்காக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 732 பள்ளிகளில் 726 பள்ளிகள் பதிவு செய்து, 713 பள்ளிகள் பங்கேற்றன. இதன்மூலம் இந்திய அளவில்அதிக பள்ளிகள் பங்கெடுத்த மாநிலங்களில், புதுச்சேரி 2-வதாக திகழ்ந்தது.

மத்திய கல்வித் துறையால் 713 பள்ளிகளும் மதிப்பீடு செய்யப்பட்டு, தர வரிசைப்படுத்தப்பட்டு அதன் விவரம்இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காரைக்கால் மாவட்ட அளவில் 162 பள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரப் பிரிவில் 8 பள்ளிகள், குடிநீர்ப் பிரிவில் 5, கழிவறை பிரிவில் 2, கைக் கழுவும் பிரிவில் 5, திறன் வளர்த்தல் பிரிவில் ஒரு பள்ளி, இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவில் 5, கரோனா விதிகளைப் பின்பற்றுதல் பிரிவில் 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தூய்மை விருதுகளுக்காக, மாவட்ட அளவில் தேர்வான பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டதுணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் கே.ராஜசேகரன், இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) எம்.ராஜேஸ்வரி, வட்ட துணை ஆய்வாளர்கள் பொன்.சவுந்தரராசு, டி.பால்ராஜ், அரசுப் பள்ளி துணை முதல்வர் எம்.பாஸ்கரன் உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x