Published : 08 Jul 2022 06:14 AM
Last Updated : 08 Jul 2022 06:14 AM

வெளியூர் மாணவர்களுக்கு சீர்வரிசையாக சைக்கிள்: கல்லல் அருகே கிராம மக்கள் அசத்தல்

கல்லல் அருகே பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீர்வரிசையாக அளித்த சைக்கிள்களை வெளியூர் மாணவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

பொதுவாக தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தேவையான மேஜை, இருக்கைகள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை அப்பகுதி கிராமமக்கள் வழங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால், கல்லல் அருகே ஊராட்சிப் பள்ளிக்கு வரும் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக சைக்கிள்களை சீர்வரிசையாக வழங்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு புதிதாக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 17 மாணவர்கள் சேர்ந்தனர். இதையடுத்து பாடத்தான்பட்டி கிராமமக்கள் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலைஅணிவித்து வரவேற்றார். அவர்களின் பெற்றோருக்கும் பொன்னாடை போர்த்தினார்.

இப்பள்ளிக்கு நாகவயல், வாரிவயல்,பொய்யலூர் உள்ளிட்ட வெளியூர்களில்இருந்து வந்து செல்லும் 15 மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சீர்வரிசையாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவற்றை அமைச்சர் மாணவர்களிடம் ஒப்படைத்தார். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் உரியநேரத்தில், சிரமமின்றி பள்ளிக்கு வந்துசெல்ல வசதியாக சைக்கிள்கள் வழங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவ்விழாவில் தலைமை ஆசிரியைஉமா, ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x