

தூத்துக்குடி: தேசிய திறனாய்வுத்தேர்வில் வெற்றிபெற்ற தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆண்டுதோறும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான வருவாய் வழி திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் ஏ.ஜனனி, பி.மாணிக்க வர்ஷா, பி.மதுமிதா, ஏ.ரம்யா, ஏ.முத்து நிவேதா, ஏ.முத்து ஸ்வேதா, ஆர்.வைஷ்ணவி, பி.பொன்சிவ, எஸ்.ஆதிஅக்ஷயா, சி.ஜீவிகா உட்பட 50 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த ஆசிரியைகளையும் பள்ளியின் தலைவர் கவுதமன், செயலாளர் முரளி கணேசன், இயக்குநர் லட்சுமி ப்ரீத்தி, தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.