

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - 2022, “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சி திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.
மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளிவளாகத்தில் அமர்ந்து கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்கள், பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், கண்ணதாசன் கவிதைகளையும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கந்தர்வன் சிறுகதைகளையும் சிறுவர் கதை களஞ்சியம் போன்ற தங்களுக்குப் பிடித்தமான நூல்களை ஆர்வத்துடன் வாசித்தனர்.
இளமையில் கல்
பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது, "ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தனர்.
மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தையும் அறிவையும் சான்றோர்களின் அனுபவங்களையும் அறிய முடியும். "இளமையில் கல்" என்ற வாக்குக்கு இணங்க, வாசிக்கும் பழக்கத்தை அறிய, நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மேலாண்மை இயக்குனர், பள்ளியின் ஆலோசகர்கள், துணை முதல்வர்,, ஆசிரியர்கள் ஆகியோரும் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.