

மதுரை: வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் சென்ற பின்பும், தாங்கள் படித்த பள்ளியை மறக்காமல், அதன் முன்னேற்றத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை முன்னாள் மாணவர்கள் பலர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவசமாக நோட்டுப்புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் ஆதிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் வரவேற்றார்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான கரூர் எல்ஐசி துணை மேலாளர் முத்துராமன், சொக்கலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜோயல்ராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டமாநில திட்ட கருத்தாளர் ராணிகுணசீலி ஆகியோர் தங்கள் சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினர்.
இவ்விழாவில், ஆசிரியைகள் வனிதா சாந்தகுமாரி, திவ்யா, கிறிஸ்டிமற்றும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியை பிரேம்குமாரி நன்றி கூறினார்.