Published : 05 Jul 2022 06:28 AM
Last Updated : 05 Jul 2022 06:28 AM
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோவை மற்றும் ஆனைகட்டி கட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், எம்எம்வி,பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், மெக்கானிஸ்ட் கிரைண்டர், வயர்மேன், வெல்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் ஆறுமாதம், ஓராண்டுமற்றும் இரண்டு ஆண்டுகள் பயிற்சிஅளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
பயிற்சியில் சேர விருப்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 20-ம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம்செய்திட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, சைக்கிள், பேருந்து பயண அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் ஆகியவை அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. வருகையின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தொழிற்பிரிவுகளை பொருத்து 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும்விடுதி வசதி வழங்கப்படும். வயதுவரம்பு 14 முதல் 40 வயது வரை (மகளிருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை). தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிமுடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT