

உதகை: வாழ்க்கையில் முன்னேற லட்சியத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவுரை கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள, கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் வெள்ளி விழா தொடக்கம் மற்றும் மாணவர் தலைவர் பதவிப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெள்ளி விழா நிகழ்ச்சிக்கான ‘25 க்ளோரியஸ் இயர்ஸ் ஆஃப் கிரசெண்ட்’ "லோகோ"வை வெளியிட்டு, வெள்ளி விழா ஆண்டை தொடங்கி வைத்தார். அவர்பேசும் போது கூறியதாவது:
இன்றைய மாணவர்கள் நாளையநம்பிக்கை. ஒவ்வொரு தனி மனிதனையும் வடிவமைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகளாகவும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் சரியான முறையில் வழிநடத்தப்படுவது அவசியம். வகுப்புகளில் கற்பிக்கப்படுவது கூகுள்ஆய்வுகள் அல்லது உலாவலுக்கு சமமாக இருக்க முடியாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் கற்றுக் கொள்வது வெறும் பாடப்பொருள் அல்ல. பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று.பாடபுத்தகங்கள் மூலம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு புத்திசாலி என்பது மிக முக்கியம். மென்மையான திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியம். எது நல்லது, எதைபின்பற்ற வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இதை மேம்படுத்தஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தட்டுவதற்கு பலவாய்ப்புகளின் கதவுகள் காத்திருக்கின்றன. வழிகாட்டுதல்களைப் பெறமுடியும் வாழ்க்கை விலை மதிப்பற்றது. நேரம் மிகவும் மதிப்பு மிக்கது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி சதீஷ்குமார் கூறினார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களின் தலைவராக பிரணவ் அனிருத்,மாணவிகளின் தலைவராக மனிஷா,விளையாட்டுப் பிரிவு தலைவராக இப்திகார், கல்சுரல் பிரிவின் தலைவராக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், 4 ஹவுஸ்களுக்கு (குழுக்கள்) தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பள்ளியின் தாளாளர் உமர் பரூக் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.