

சென்னை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மத்திய அரசின் சிறு. குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சார்பில் "தூய்மை இந்தியா" திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜுன் 16 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கழிவறைகளை தூய்மைப்படுத்துவது, சுவர் ஒவியங்கள் மூலம் விழிப்புணர்வு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படுத்தும் பாதிப்புகளை எடுத்துரைப்பது, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மஞ்சள் துணிப்பைகள்
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை சிஎம்எஸ் பாலாஜி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நிறைவுநாள் நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சள் துணிப்பைகளை மத்திய அரசின் சிறு. குறு,நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சென்னை மைய உதவி இயக்குநர் அம்புரோஸ் ரெய்சன் வழங்கினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தை தேசிய பசுமை படைசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், "ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும்
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்" என்று அனைத்துமாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.