Published : 01 Jul 2022 07:26 AM
Last Updated : 01 Jul 2022 07:26 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்திருக்கிறது.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான வளாகம், கல்வித் தரம்,சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு சமீபத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல்மற்றும் ஒரே அரசு பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.திருசெல்வராஜா கூறியதாவது:
தனியார் பள்ளிகளுக்கு இணையாகஇப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தந்துள்ளோம். 6 முதல் 10 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அகன்ற திரைகளில் புரஜெக்டர் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளி மைதானத்தையும் பள்ளி வளாகத்தையும் தூய்மையாக பராமரித்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளோம்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிதி உதவியோடு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறோம். மாணவர்களுக்கான 5 கழிப்பறைகளையும், மாணவிகளுக்கான 5 கழிப்பறைகளையும் சுத்தமாக பராமரித்து வருகிறோம். தனியார் பங்களிப்போடு சைக்கிள் நிறுத்துமிடத்தில் தரைத்தளத்தோடு ஷெட் அமைத்துள்ளோம்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்காக உணவுக் கூடம் அமைத்துள்ளோம். அங்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வைத்துள்ளோம். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்திலும், உணவருந்திய பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் மாணவிகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.
பள்ளியில் புத்தக வங்கி தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இறுதித் தேர்வு முடிந்த பின்பு அவர்களது புத்தகங்களை பள்ளியில் வாங்கி சேமித்து வைப்போம்.
கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் "தங்களுக்கு பாடப் புத்தகம் வேண்டும், தேர்வு முடிந்ததும் தருகிறேன்" என ஒரு கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
மாணவ, மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். என்எல்சி நிதி உதவியோடு மினி அறிவியல் ஆய்வகமும்அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்கவும், பள்ளிகேன்டீனில் கடலை, எள்ளு மிட்டாய் உள்ளிட்டவற்றுடன் சிறுதானிய பிஸ்கட்களை விற்கவும் திட்டமிட்டுள்ளோம். பள்ளியை சிறப்பாக பராமரிப்பதாலும் கல்வியில் சிறந்து விளங்குவதாலும் ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT