Published : 01 Jul 2022 07:12 AM
Last Updated : 01 Jul 2022 07:12 AM
கோவை: கோவை சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் பங்கேற்றமாதிரி சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் 3 பேர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர்.
ஒன்றாம்வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைஉள்ள மாணவர்கள் தங்கள் வாக்குகளை, அதற்காக வைக்கப்பட்ட பெட்டியில் பதிவு செய்தனர். தேர்தல் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல்வர் பதவிக்கு மாணவன் டி.சபரீஷ், துணை முதல்வர் பதவிக்கு ரா.ராஜேஷ், அமைச்சர்களாக கல்வித் துறைக்கு ரா.தீக்ஷிதா, சுகாதாரத்துறைக்கு ந.காவிய ஸ்ரீ, பாதுகாப்புத்துறைக்கு மூ.கிரிதரன், விளையாட்டுத்துறைக்கு ச.பிரவீன், நீர்வளத் துறைக்கு ரா.ஜனார்த்தனன், உணவுத் துறைக்குநா.சுபர் ரஞ்சனா, வனத்துறைக்கு கா.ஸ்ருதிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாதிரி தேர்தல் நடத்தியது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கணேசன் கூறும்போது, "எதிர்காலத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், தேர்தலின் மாண்பையும் சிறுவயதிலேயே மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பள்ளியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் கவனிப்பார். வனத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பள்ளியின் பசுமைப்பரப்பை அதிகரித்தல், செடிகளை பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT