

தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் மூலம் இதுவரை 1,469 பெண் குழந்தைகளை மீட்டு அரசு அங்கீகரித்துள்ள தத்தெடுப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தருமபுரி ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில்மாவட்ட ஆட்சியர் மலர்விழி, முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் மலர்விழி பேசியதாவது:
பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயில வேண்டும். இம்மாவட்டத்தில் இதுவரை 112 குழந்தைகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 15 குழந்தைகளின் திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1,469 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அரசுஅங்கீகரித்துள்ள தத்தெடுப்பு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 பெண் குழந்தை பிறந்தால் ரூ.50ஆயிரம் வைப்பு நிதியாக வைத்து பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,. திருமண நிதியுதவி திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் நிதியுதவி 8 கிராம் தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரம், ரூ.18 ஆயிரம்வழங்கும் திட்டம், ரூ.25 ஆயிரம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர், மறைந்த முன்னாள் முதல்வர்.
இவ்வாறு ஆட்சியர் மலர்விழி பேசினார்.
முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் நாகலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, சமூகப்பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் குணசேகரன், அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.