Published : 27 Feb 2020 09:42 AM
Last Updated : 27 Feb 2020 09:42 AM

பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எடுத்துக் கூறுங்கள்: ஆசிரியர்களுக்கு காவல் துறை அதிகாரி வேண்டுகோள்

தருமபுரி

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிருஷ்ணகிரி வெங்கடேசன், ஓசூர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேசியதாவது:

சாலை விபத்தில் குடும்பத்தில் ஒருவர் இறப்பதால், அந்த குடும்பமேபாதிக்கிறது. தனி மனித ஒழுங்கீனத்தால் தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் உணருவதில்லை. சாலையில் அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, ரேசிங் முறையில் வாகனங்களை ஓட்டிச்சென்று பொதுமக்களை பயமுறுத்துவது போன்றவற்றால் விபத்துகள் நடக்கின்றன.

சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். ஒரு நிமிடம் நாம் செய்யும் தவறால், காலம் முழுவதும் நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதோடு, அவர்கள் மூலம் பெற்றோர்களையும் மாற்ற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x