

சிவகங்கை அருகே மூடு விழா காணஇருந்த மல்லாக்கோட்டை அரசு பள்ளி, கிராம மக்களின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது.
சிவகங்கை அருகே மல்லாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1954-ம் ஆண்டு திண்ணை பள்ளியாக தொடங்கப்பட்டது. இங்கு மல்லாக்கோட்டை, சித்தமல்லிப்பட்டி, ஜெயங்கொண்டநிலை, வடவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். ஆங்கிலப் பள்ளி மோகத்தால் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. கடந்தஆண்டு 8 மாணவர்களே இருந்ததால், அப்பள்ளியை மூடிவிட்டு நூலகமாக மாற்ற அரசு திட்டமிட்டது.
தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் இல்லாததால் தான்மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக ஆசிரியர்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து மல்லாக்கோட்டை கிராமமக்கள் பள்ளி மூடுவதை தவிர்க்க கிராம கூட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதியை அளித்து ஒரே ஆண்டில் பள்ளியை மீண்டும் புதுப்பொலிவுடன் மாற்றினர்.
பழுதடைந்த பள்ளி கட்டிடம் சீரமைப்பு, தலைவர்கள் படம் வரைந்தசுற்றுச்சுவர், ஸ்மார்ட் வகுப்பறைகள், பேவர்பிளாக் நடைபாதை, தோட்டம், மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றினர். தனியாருக்கு இணையான சீருடை, வேன் வசதி போன்றவையும் செய்து தந்தனர்.
இதுதவிர உடற்கல்வி ஆசிரியரை நியமித்து யோகா, நடனம் போன்ற பயிற்சிகளையும் மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக கிராமமக்கள் ரூ.10 லட்சம் வரை செலவழித்தனர். இதனால் நடப்பாண்டில் 6-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்தது.
இதைக் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று கிராம மக்கள் விழா நடத்தினர். இதில், வட்டாரக் கல்வி அலுவலர் ஜேம்ஸ், தலைமைஆசிரியர் பொன்.பால்துரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தொழிலதிபர் மேகவர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.