

பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கேட்டுக்கொண்டார்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.இதையடுத்து விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் இதுகுறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
துணிப்பைகள் மாற்று
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளையும், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்பவர்கள் மீதுஅபராதம் விதிக்கப்படுகிறது. மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தும்உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுடன், பொதுமக்கள் மாற்று பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கடலிலும், நிலத்திலும் உயிரினங்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்களை கல்லூரி மாணவ,மாணவிகள் தங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் மெகராஜ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குர் அசோக்குமார், செயற்பொறியாளர் கமலநாதன், நாமக்கல் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.