

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்னி சிறகுகள் அமைப்பின் சார்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஓலைச்சுவடிகளில் தேடுவாரற்று கிடந்த ஐம்பெரும் காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பண்டைய தமிழ் இலக்கியங்களை தேடிக்கண்டுபிடித்து அவற்றை 90-க் கும் மேற்பட்ட நூல்களாக பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுகிறார்.
தமிழ்த் தாத்தா
உவேசாவின் பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அவரது வாழ்க்கை குறித்தும், அவரின் தமிழ்த் தொண்டுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் யா.சுகிர்தராஜ் தலைமை வகித்தார். அக்னி சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாளை.பாலாஜி முன்னிலை வகித்தார்.
வாசிப்பை சுவாசிப்போம்
நிகழ்ச்சியின்போது, பள்ளியில் 6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேருக்கு எழுத்தாளர் தமிழினி ராமகிருஷ்ணண் எழுதிய ‘வாசிப்பை சுவாசிப்போம்’ புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல, அரியலூர் அருகேயுள்ள கடு.பொய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உ.வே.சாமிநாதய்யர் பிறந்தநாள் விழாவில், அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், சமூக ஆர்வலர் தமிழ்க்களம் இளவரசன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, நடைபெற்ற பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியை மீனாகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.