

அறந்தாங்கி அருகே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சர்வதேச தரத்துக்கு நிகராக பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடியில் அரசுநடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் 15 ஆண்டுகளாக வி.ஜோதிமணி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். அங்கு, அனைத்து வகுப்புகளிலும் குளிர்சாதன வசதி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட நவீனவசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர்,அவர் அப்பள்ளியில் இருந்து இடமாறுதல் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியரானார். சுமார் 1மாதம் பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தார். பின்னர், பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழகக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பச்சலூர் பள்ளியை தரம் உயர்த்துவதென முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் ஊர் மக்கள் மற்றும் கொடையாளர்களின் உதவி அரசின் திட்டங்கள்உள்ளிட்டவற்றைக் கொண்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் தொடங்கின.
முதல் கட்டமாக, பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டது.
குறிப்பாக, அங்கு ஏற்கெனவே இடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட கட்டிடமும் புனரமைக்கப்பட்டது. ஒரு வகுப்பறையைத் தவிர அனைத்துவகுப்பறைகளிலும் ஏசி, இணைய வசதியுடன் கூடிய தொடுதிரை, கணினி,தலா 4 மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்களின் கற்றல்உபகரணங்களை பாதுகாக்க பீரோ, இருக்கைகள், ஸ்மார்ட் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், விசாலமான கூட்டஅரங்கு, கண்காணிப்பு கேமராக்கள்,ஸ்மார்ட் ஒலிபெருக்கி, மேம்படுத்தப்பட்ட விளையாட்டுக் கருவிகள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதிய உணவை மாணவர்களே தேவைக்கு ஏற்ப போட்டுச் சாப்பிடும் முறை, மாணவர்களிடையே சுகாதாரம்,ஒழுக்கம், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளியை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய காலகட்டத்துக்குள் சர்வதேச தரத்துக்கு இப்பள்ளியின் நிலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி கூறியதாவது:
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் புத்தகத்தில் படிப்பதைவிட தொடுதிரை மூலம் ஒலி, ஒளி வடிவில் கற்கின்றனர். கூகுளில் தேடியும்படிக்கின்றனர்.
‘ஸ்கைப்' மூலம் பிற கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்களை தொடர்புகொண்டு கூடுதல் தகவலை பெற்று மாணவர்களின் திறன் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறநாடுகளில் இருந்தும் தகவல் பெறப்படுகிறது. இதனால் இப்பள்ளியானது சர்வதேச தரத்துக்கு உயர்ந்து நிற்கிறது.
தனக்குத் தேவையான உணவை, சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களே உணவைஎடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவருக்கு சத்துணவுப் பணியாளர் உதவி செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.