

காதி பொருட்களைத் தயாரிக்கும் முறை குறித்து சில்வார்பட்டி அரசுமாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொழிற்சாலைக்கு சென்று அறிந்துவந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ளது சில்வார்பட்டி. இங்குள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தியின் 150-ம்ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காதி பொருட்கள் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளத் திட்டமிட்டனர்.
இதற்காக அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் இருக்கும் காதி பொருட்கள் தயாரிக்கும் மையத்துக்கு 9-ம்வகுப்பு மாணவ, மாணவிகள் 40 பேர் சென்றனர். அங்கு மூலிகைச் செடிகளை அதன் தன்மை மாறாமல் உலர்த்துதல், பொடி செய்தல், பாக்கெட்டுகளில் அடைத்தல் ஆகியவற்றைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தனர்.
மேலும் பல்வேறு மூலிகைச் செடிகளின் மருத்துவ குணங்கள், அவை எந்தெந்த நோய்களைக் குணப்படுத்துகின்றன என்கிற விவரங்களையும் கேட்டுக் குறிப்பெடுத்தனர். தொடர்ந்து நெசவுத் தொழிலாளர்களை சந்தித்து ஆடை வடிவமைப்பு முறைகளையும், பின்னர் கடலை மிட்டாய், கருப்பட்டி தயாரிக்கும் விதம் குறித்தும் பார்வையிட்டனர்.
ஆசிரியைகள் உஷாராணி, ராஜேஸ்வரி, மீனாம்பிக்கை ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். புலவர் ராசரத்தினம் காந்திய சிந்தனைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கிராமங்களே நாட்டின் முது கெலும்பு. எனவே கிராமத் தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார். பள்ளி விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு கதராடையையே போர்த்த வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் அப்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மோகன் செய்திருந்தார்.
இந்த களப்பயணம் குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், காதி தயாரிப்பு மையத்திற்கு நேரில் சென்று தயாரிப்பு முறைகளை பார்த்து வந்தது எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது என்றனர்.