Published : 14 Feb 2020 09:52 AM
Last Updated : 14 Feb 2020 09:52 AM

காவேரிப்பட்டணம் அருகே கண்டெடுக்கப்பட்ட 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சால மன்னர் கால கல்வெட்டின் வரலாறு: ஆர்வத்தோடு கேட்டறிந்த பள்ளி மாணவ, மாணவிகள்

காவேரிப்பட்டணம் அருகே என்.தட்டக்கல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டின் வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கிய காப்பாட்சியர் கோவிந்தராஜ்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் அருகே என். தட்டக்கல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சால மன்னர் கால கல்வெட்டு குறித்த வரலாற்றை, அருங்காட்சியக காப்பாட்சியரிடம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் என்.தட்டக்கல்கிராமத்தில், அரசு அருகாட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் வரலாற்று ஆய்வு நடந்தது. அப்போது 650 ஆண்டுகளுக்கு முந்தையஒய்சால மன்னர் கால கல்வெட்டை கண்டெடுத்தனர். இதன் வரலாற்றைஅப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிந்தராஜ் விளக்கிக் கூறியதாவது:

இக்கல்வெட்டு பழைய கோயிலில் கோணாவிட்டமாக (மேற்கூரையில் உள்ள கல்) பயன்படுத்தி இருந்ததாக மக்கள் கூறினர். இக்கோயில் அருகேபுதிதாக ராமநாதேஸ்வரர் கோயில் ஒன்று இருப்பதையும், அங்கு ஒரு பழமையான லிங்கம் இருப்பதையும் காண முடிகிறது.

ஒய்சால மன்னன் வீரராமநாதனின் 33-ம் ஆட்சியாண்டில், அதாவது கி.பி.1287-ல் பெருமுகைப்பற்று துவரப்பள்ளி முதலிகள், வேளார் மற்றும் விக்கரம சோழநாட்டு நாயகஞ்செய்வாரோடு, தத்தக்கல் முதலிகளும் இணைந்து அழகிய மணவாளன் என்ற பட்டனுக்கு பட்ட விருத்தியாக நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. தட்டக்கல் என்று இன்று அழைக்கப்படும் இவ்வூர் 650 ஆண்டுகளுக்கு முன் இக்கல்வெட்டில் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு இருந்தது தெரிய வருகிறது.

இக்கல்வெட்டில் வரும் பெருமுகைப்பற்று, செஞ்சி அருகே மேல்களவாய் கிராமத்தில் உள்ள ஏரியில் விஜயநகர மன்னர் கால தமிழ் கிரந்த கல்வெட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்வட்டம் தொரைப்பாடியில் அமைந்த வட்டெழுத்து நடுகல்லிலும், பெருமுகை என்கிற நாடு 6-ம் நூற்றாண்டிலே இருப்பதும், இந்த நாட்டின் கீழ் தட்டக்கல் இருந்ததற்கும் ஆதாரமாக கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அருங்காட்சியக காப்பாட்சியர் கூறிய கல்வெட்டு வரலாறை பள்ளிமாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x