

தேர்வு எழுதவிருக்கும் 8-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று (பிப். 12) கடைசி நாள் ஆகும்.
அரசு தேர்வு துறை சார்பில், 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் 2-ம் தொடங்கி9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட தனித்தேர்வர்களிடமிருந்து கடந்த ஜனவரி 27 முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அப்போது விண்ணப்பிக்கத் தவறியவர்களிடம் தத்கல் திட்டத்தின் கீழ்வரும் கடந்த பிப்ரவரி 10-ம் தேதிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் தனித்தேர்வர்கள் இன்று(பிப்.12) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 01.01.2020 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.125 மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 எனமொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும். இத்துடன் தத்கல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள் மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல்,பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மறுமுறை தேர்வெழுதுபவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். இதில் ரூ.42-க்கான தபால் தலை ஒட்டி சுய முகவரி எழுதப்பட்ட தபால் உறையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தேர்வானது தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இணையதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். அப்போது பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள மையத்தில் மட்டுமே தனித்தேர்வர்கள் தேர்வெழுத முடியும். தேர்வு மையம் மாற்றம் செய்து கொடுக்கப்படாது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து, சலுகை கோரும்கடிதம், மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.