

ஒரு யானை தனது வாழ்நாளில் 40 லட்சம் செடிகளை உருவாக்குகிறது என்று தருமபுரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழ்க்கலை இலக்கியப் பட்டறை மற்றும் தருமபுரி மக்கள் மன்றம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், தருமபுரி பாரதிபுரம் பகுதியில் காவேரிபழத்தோட்ட வளாகத்தில் வாரந்தோறும்மரபுச் சந்தை நடத்தப்படுகிறது.
ரசாயன பயன்பாடில்லாமல் வளர்க்கப்பட்ட கீரைகள், பழங்கள், மரபு ரக காய்கறிகள், பயறு வகைகள், சிறு தானிய வகைகள், சுத்தமான தேன், நாட்டு மருந்துகள், மரபு விதைகள், தின் பண்டங்கள், நாட்டு மாட்டு பால், மோர், நெய், நாட்டுக் கோழி முட்டைகள், கலப்பில்லா நாட்டுக் கோழிகள், நீரா பானம், பனம் பழச்சாறு, மூலிகை சூப் வகைகள் உள்ளிட்டஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்கள் இந்த மரபுச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பள்ளி குழந்தைகளுடன், வனங்கள், வன உயிரினங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யானை ஆய்வாளரும், எழுத்தாளருமான பிரவீன்குமார் கலந்து கொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
யானைகள் வனங்களை வளர்க்கும் தோட்டக்காரனாக உள்ளன. காடுகளை காக்கும் பாதுகாவலனாக புலிகள்உள்ளன. காடுகளின் ஆரோக்கியமே யானைகள் தான். ஒரு யானை தன்வாழ்நாளில் சுமார் 40 லட்சம் செடிகளை உருவாக்குகிறது.
இந்திய காடுகளில் அதிக அளவில் வாழ்ந்த யானைகள், தந்தங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக வேட்டையாடப்பட்டும், விபத்தில் சிக்கியும் என அழிந்து தற்போது சுமார் 27 ஆயிரம் யானைகள் மட்டுமே உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் 2017-ம்ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 200 யானைகள் மட்டுமே உள்ளன. யானைகள் அதிகம் இருந்தால் தான் காடுகள் செழித்து வளரும். புலிகள் அதிகம் இருந்தால் தான் அந்தக் காடுகள் அழிவில் இருந்து காக்கப்படும்.
காடுகளின் அரசன் சிங்கம் என்று நாம் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். ஆனால், தலைமைப் பண்பு, காடுகள் மேலாண்மை, வழி அமைத்தல், விதை பரப்பல், ஆதார உயிரினம், பல்லுயிர் பேணுதல், பேருயிர்ஆகிய பண்புகளைக் கொண்டுள்ள யானைகள் தான் காடுகளின் அரசன்என்று சொல்லித்தருவதே பொருத்தமாக இருக்கும்.
உணவு தானிய உற்பத்தியை பாதிப்பது தீமை செய்யும் பூச்சியினங்கள். அவற்றை அழிப்பது பறவை இனங்கள். பல்வேறு நெருக்கடிகளால் பறவைஇனங்கள் அழிந்து கொண்டே போனால்பூச்சியினங்களின் பெருக்கம் அதிகரிக்கும். எனவே, பறவைகள் பெருக்கத்துக்கான சூழலை நாம் உருவாக்கி பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்கள் திருவள்ளுவன், சங்கர், சிவா, நிர்மல், செந்தில்குமார், சூழல் ஆர்வலர்கள் ஆசைதமிழ், சுஷீல்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.