

கீழடி தொல்பொருட்களைப் பார்க்கும்வகையில் கல்விச் சுற்றுலாவுக்கு ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மதுரைக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைக் கடந்து வெளியுலகத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒரு நாள் கல்விச் சுற்றுலாஅழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அத்துறையின் செலவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிமாணவ, மாணவிகள் வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த சுற்றுலாத் திட்டம் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கியது.
கல்வி சுற்றுலா
இதையடுத்து மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள கீழடி அகழாய்வு தொல் பொருட்களைப் பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள உடையனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரைக்கு கல்விச்சுற்றுலா வந்தனர்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரவேல் தலைமையில் ஆசிரியர்கள் பழனிவேல், முத்துப்பாண்டி, மாரிச்செல்வி, ராமமூர்த்தி ஆகியோர் மாணவர்களை காரில் அழைத்து வந்தனர்.
திருமலை நாயக்கர் மகால், காந்திமியூசியம், உலகத் தமிழ்ச் சங்கம்,கீழடி அகழாய்வு பகுதி உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி தொல் பொருட்களை மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு தொல்லியல் துறையினர் கீழடி அகழாய்வு குறித்து விளக்கம் அளித்தனர். கல்விச் சுற்றுலா மூலம் வகுப்பறைகளைத் தாண்டி வெளியிடங்களில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது என மாணவ,மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.