

கேந்திரிய வித்யாலயா பள்ளி விளையாட்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் கோபிநாத், மாணவி பிரியதர்ஷினி முதலிடத்தைப் பிடித்தனர்.
கோவை சவுரிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் என்.அழகேந்தி தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, ‘‘பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்களில் மாணவர்களின் பங்களிப்பு நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், திறமையை மேம்படுத்திக் கொண்டு,தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வதாகவும் அமைகிறது. மதிப்பெண் மட்டுமே பிரதானமாக இருக்கும் பள்ளிகளில், மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவது அவசியமாகிறது. இன்றையதொழில்நுட்ப உலகில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும், நன்மை, தீமைகளையும் போதிப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமை" என்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
சூப்பர் சீனியர் மாணவர் பிரிவில்9-ம் வகுப்பு மாணவர் கோபிநாத் 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயங்களில் முதலிடம் பெற்றார். மாணவிகள் பிரிவில் 12-ம் வகுப்பு மாணவிபிரியதர்ஷினி 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும் பிடித்தார்.
சீனியர் மாணவர் பிரிவில் எஸ்எஸ்எல்சி மாணவர்கள் ஆதித்யா 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றார். காமராஜ் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும், 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமும் பிடித்தார். மாணவியர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி சோனா 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டப் பந்தயங்களில் முதலிடம் பிடித்தார்.
ஜூனியர் மாணவர் பிரிவில் 8-ம் வகுப்பு மாணவர் கவின் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டப்பந்தயங்களில் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர். மாணவிகள் பிரிவில் 7-ம் வகுப்பு மாணவி சங்கமித்ரா நீளம்தாண்டுதல் போட்டியில் முதலிடமும், 100 மீ., 200 மீ. ஓட்டப்பந்தயங்களில் இரண்டாமிடமும் பெற்றார். தொடக்கப் பள்ளிகள் பிரிவில் மெர்க்குரி அணியும், மேல்நிலைப் பள்ளிகள் பிரிவில் சி.வி.ராமன் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பரிசுகள் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, முதுநிலை ஆசிரியர் அருணாச்சலம் நன்றி கூறினார்.