

அரசு ஊழியர்களுக்கான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு மானாமதுரை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி. இவர் சென்னை நேருவிளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான அரசு ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறும் தேசியஅளவிலான அரசு ஊழியர்களுக்கான போட்டிக்கு தேர்வானார். அவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கிறார். இவர் 2018-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரது அணி நான்காவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய போட்டியில் பங்கேற்பது குறித்து கலைச்செல்வி கூறும்போது,"எனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் இருந்தது. இதனால் அனைத்து விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டேன். உடற்கல்வி ஆசிரியரான நான் மாணவர்களுக்கு விளையாட்டை கடமைக்கு என்று இல்லாமல், சேவையாக சொல்லிக் கொடுக்கிறேன். அரசு ஊழியர்களுக்கான போட்டியில் பங்கேற்பதில் சந்தோஷமாக உள்ளது" என்றார்.
புனேயில் நடைபெற உள்ள தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருக்கும் உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்விக்கு மானாமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.