Published : 07 Feb 2020 10:28 AM
Last Updated : 07 Feb 2020 10:28 AM

ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளி மாணவி: தலைமை பண்பை வளர்க்க ஆசிரியர்களின் புதுமையான முயற்சி

தலைமை பண்பை வளர்க்கும் விதமாக, அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு ஒரு மணிநேரம் தலைமையாசிரியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர்அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சின்னதுரை, மாணவ- மாணவிகளிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக, நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து மாதத்துக்கு ஒருவரை ஒரு மணி நேரம் தலைமையாசிரியராக பொறுப்பேற்க வைப்பது எனத் திட்டமிட்டார். அதன்படி, சக ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தார்.

முதல் வாய்ப்பு 9-ம் வகுப்பில் சிறந்துவிளங்கும் மாணவி ம.சங்கீதாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவிசங்கீதா ஒரு மணி நேரம் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்தார். அப்போது, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

அத்துடன், வகுப்புகளுக்குச் சென்று என்ன பாடம் நடத்தப்படுகிறது என்பதையும் நேரில் பார்வையிட்டார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு வகைகள், முட்டைகளின் எண்ணிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

ஒரு மணி நேரம் தலைமையாசிரியரான அனுபவம் குறித்து மாணவி சங்கீதா கூறும்போது, "ஒரு மணி நேரம் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்தது சற்று பதற்றத்தைக் கொடுத்தது. எனினும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாமும் நன்றாகப் படித்து வருங்காலத்தில் இதுபோல தலைமையாசிரியர், கல்வி அதிகாரி போன்ற பொறுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது" என்றார்.

ஆசிரியர்கள் விருப்பம்

தலைமை ஆசிரியர் சின்னதுரை கூறுகையில், “தலைமைப் பண்பை மாணவ, மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் விதமாக இவ்வாறு ஒரு மணி நேர தலைமையாசிரியர் பணி வாய்ப்பை வழங்க முடிவெடுத்தோம்.

மாணவ, மாணவிகள் அனைவரும் நன்றாகப் படித்து, இதுபோன்ற தலைமைப் பண்புகளைப் பெற்று சமுதாயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் விருப்பம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x