

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட 31 தனியார் பள்ளிகளில் 442 பேருக்கு ஆசிரியர் பணி, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக கிடைத்தது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் பள்ளிஆசிரியர் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 506 பேர் கலந்துகொண்டனர். 31 தனியார் பள்ளிகள்இம்முகாமில் பங்கேற்றன. இவர்களில் 442 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி கூறும்போது, 'இம்முகாமில் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் பங்கேற்று தங்கள் பள்ளிகளுக்கு தகுதியுடைய ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர். அவர்களுக்கு அப்போதே நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் வேலைவாய்ப்புமுகாம்களில் பங்கேற்க விரும்புபவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. முற்றிலும் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
அரசு பணி கிடைக்கும் வரை தொடர்ந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இதுபோன்ற முகாம்களில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம்' என்றார்.