கோவை மாவட்டத்தில் 30 மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்
கோவை மாவட்டத்தில் 30 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் கு.ராசாமணி காமராஜர் விருதுகளை வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் கல்விமற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் முன்னிலை வகித்தார். சுண்டாக்கமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும்ரூ.1 லட்சம் காசோலை, காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும் ரூ.75 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை அந்தந்தபள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.
இதேபோல் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கும் விருதுவழங்கப்பட்டது. 12 அரசுப் பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் 15 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 15 பேருக்குதலா ரூ.20 ஆயிரம் காசோலையும், காமராஜர் விருதும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறும்போது, ‘‘பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதன்அடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் காமராசர் விருது வழங்கி கவுரவிக்கிறது.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் 2019-ம் ஆண்டுக்கானகாமராஜர் விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்துள்ளது’’ என்றார்.
