

உடுமலையில் 1,099 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உடுமலையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும்நிகழ்ச்சி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜேந்திரா சாலைஅரசு மேல்நிலைப் பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,099 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அவர் பேசும்போது, ‘‘தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் உள்ளன. அரசு பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கான செலவை ஏற்பேன். அவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர தேவையான உதவிகள் செய்வேன்’ என்றார்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று, 685 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்என்.கிருஷ்ணராஜ், கோபிச்செட்டி பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், பவானி மாவட்ட கல்வி அலுவலர் கா.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.