

சிவகங்கை அருகேயுள்ள சேத்தூரில் அரசு பள்ளி மாணவர்கள் காய்கறி, மூலிகை தோட்டம் அமைத்து அசத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேத்தூரில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
ஏழு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தொடக்கப் பள்ளி சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1928-ல் தொடங்கப்பட்டது. 2011-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை அடைந்து வரு கிறது. தனி மைதானம் இருப்பதால் விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
படிப்பு, விளையாட்டு மட்டுமின்றி விவசாயத்திலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதால் சத்துணவு அமைப்பாளர் கண்ணுச்சாமி மற்றும்ஆசிரியர்கள் முயற்சியால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் காய்கறி,மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளனர். கீரை வகைகள், கொத்தவரை, வெள்ளரி, பீர்க்கங்காய் சுரைக்காய், பூசணி, அவரை, தூதுவளை, கீழாநெல்லி, முள்ளுமுருங்கை, சோற்றுக்கற்றாலை என 50-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மூலிகை செடிகள்உள்ளன. அவை அனைத்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் இருந்தே சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை பறித்துக் கொள்கின்றனர்.
தேசிய பசுமைப் படை மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து தோட்டத்தை தினமும் பராமரிக்கின்றனர். இதற்காக சத்துணவுப் பணியாளர் கண்ணுச்சாமிக்கு சிறந்த பணியாளருக்கான விருதை அண்மையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பள்ளியின்தலைமை ஆசிரியை விஜயலட்சுமி கூறுகையில், "மாணவர்கள் பயிலகணினி வகுப்பறை ஏற்படுத்தியுள் ளோம். நூலகத்தில் அனைத்து வகையான புத்தகங்களும் உள்ளன. மேலும் இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் காய்கறித் தோட்டம் அமைத்து மாணவர்கள் மூலம் பராமரித்து வருகிறோம்" என்றார்.