

அரசுப் பள்ளி வளாகத்தில் செயல்படும், மழலையர் வகுப்புகளுக்கு அரசு அங்கீகாரம் கிடைப்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர் .
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் படியூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் படித்து வரும் மழலையர் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் கூறிய தாவது:
எங்கள் ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 150 பேர் படித்து வருகின்றனர். எல்.கே.ஜிமற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் மழலையர் வகுப்பை நடத்திக் கொள்ள மட்டும் இடம் அளித்து, கல்வி அலுவலர்கள் உதவி செய்துள்ளனர்.
ஆனால் இப்படிப்புகளுக்கு இன்னும்அரசால் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. தற்போது படியூர், ரெங்கம்பாளையம், கணபதிபாளையம் மற்றும் ஒட்டப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 46 குழந்தைகள் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் பயின்றுவருகின்றனர்.
பெற்றோர்களாகிய நாங்களே ஆசிரியர்களை நியமித்து எல்.கே.ஜி. மற்றும்யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதற்காக தனியாக இரண்டுஆசிரியர்கள், ஒரு பெண் உதவியாளரும் நியமித்து அவர்களுக்கான சம்பளத்தை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துடன் திரட்டி மாதந்தோறும் தருகிறோம்.
குழந்தைகள் படிக்க வேண்டும் எனஅனைவரும் நினைப்பதால், இத்தனை சிரமத்தையும் தாங்கிக் கொள்கிறோம். பலரும் அன்றாடக் கூலி வேலை செய்யும் விவசாயக் கூலிகள்.
ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும்
அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த அரசுப் பள்ளியில்படிக்கும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை அரசு அங்கீகரித்தால், எங்களைப் போன்ற ஏழை குடும்பங்கள் பயன்பெறும்.
எங்களால் செலவு செய்து, குழந்தைகளை படிக்க வைக்க முடியாததால் தான், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆகவே அரசும், கல்வித்துறையும் கருணைகூர்ந்து இரண்டு வகுப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்களிடம் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்கள் பள்ளியை அரசு அங்கீகரித்து, ஏழை பெற்றோரின் செலவை குறைக்க வேண்டும். மழலையர் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிகிறது. மதிய உணவும் வழங்க வேண்டும்.
வசதியற்ற ஏழைக் குழந்தைகளின் வருங்கால நலன் மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டு முதல், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜிவகுப்புகளை அரசு அங்கீகரித்து குழந்தைகளுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள், போதிய கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை வழங்கி பெற்றோரின் சுமையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.