

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கற்பிக் கும், சிறப்பு ஆசிரியர்களுக்கு 3 நாள் பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி, வாழ்வியல் திறன் பயிற்சிகளை அளித்து வரும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டுகளுக்கு 3 நாள் பணியிடை பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. முருகன் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து நிபுணர்கள் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை சூழலில் கற்றல் குறைபாடு குறித்த விளக்கங்கள், தீர்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும் டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா, டிஸ்கால்குலியா, டிஸ்பிரக்சியா கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு, எவ்வாறு குறைபாடுகளை களைந்து கற்பிப்பது என விளக்கப்பட்டது. மேலும் 21 வகையான மாற்றுத்திறன் தன்மைகள் குறித்தும், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள சிறப்புஆசிரியர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டுகள் என 53 பேர் பயிற்சி பெற்றனர். நிபுணர்கள் நாகராஜ், பிரகாஷ், ஹேமலதா, தேவப்ரியா, ரேவதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.