

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை கலைப் பள்ளிஇணைந்து சென்ட்ரல், எழும்பூர், ஷெனாய் நகர், அண்ணாநகர் கோபுரம்,கோயம்பேடு, பரங்கிமலை, விமானநிலையம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓவியப் போட்டிகளை நடத்த உள்ளனர். பிப்ரவரி 2-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இப்போட்டி நடைபெறும்.
மெட்ரோ ரயில், மெட்ரோ நிலையம்,மெய்நிகர் உண்மை இதில் ஏதாவதொரு தலைப்பில் இந்த போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் 20 சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅவற்றுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
‘சிறந்த கலைஞர் விருது’ தேர்வுக்காக, ஒவ் வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஓவியங்கள் பயணிகள் வாக்களிப்பதற்காக 15 மெட்ரோ நிலையங்களிலும் பிப்.3-ம் தேதி முதல்வைக்கப்படும். பயணிகள் தேர்ந்தெடுக்கும் சிறந்த ஓவியக் கலைஞருக்கு பிப். 9-ம் தேதி சென்ட்ரல் மெட்ரோவில் நடக்கும் விழாவில் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
ஓவியம் வரைவதற்கான சார்ட் பேட்டர் சென்னை கலைப் பள்ளியால் வழங்கப்படும். மற்ற உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் பதிவு
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை www.chennaiartschool.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது ஜன. 29-ம் தேதி முதல் 7448822099 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை பதிவு செய்யலாம்.
குழு ஏ - 1 முதல் 3-ம் வகுப்பு, குழு பி - 4 முதல் 6-ம் வகுப்பு, குழு சி - 7 முதல் 9-ம் வகுப்பு, குழு டி 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களும் குழு இ-யில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.