திருப்பூர் புத்தகத் திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
புத்தகத் திருவிழாவையொட்டி திருப்பூர்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலைத்திறன் போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் 17-வது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன. 30-ம் தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை 11 நாட்கள் திருப்பூர் மாநகராட்சி அருகே கே.ஆர்.சி. சிட்டிசென்டரில் கோலாகலமாக நடைபெறஉள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தகதிருவிழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட கலை இலக்கியதிறனாய்வு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான (2019-2020) கலை இலக்கியதிறனாய்வு போட்டிகள், திருப்பூர், இடுவம் பாளையம், பெருமாநல்லூர்,பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், குன்னத்தூர், அவிநாசி உட்பட 10 மையங்களில் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறுவர் சிறுமியர் பிரிவினருக்கு ஓவியப் போட்டியும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை எழுதும் போட்டிகளும் நடத்தப்பட்டன.
திறமைகள் வெளிப்பாடு
தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில், மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியை கண்காணிக்கும் பணியில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அரசுத் துறை ஊழியர்கள், அறிவியல் இயக்கத்தினர், புத்தகத் திருவிழா மாணவர் இலக்கியப் போட்டி குழுவினர் ஈடுபட்டனர்.
பிப்.4-ல் பரிசளிப்பு
“சிறந்த ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 4-ம் தேதி புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
