

த.சத்தியசீலன்
கோவை அன்னூர் அருகேயுள்ள நடுப்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல, அப்பள்ளியின் ஆசிரியர்களே சொந்த செலவில் ஆட்டோ வசதி செய்துகொடுத்துள்ளனர்,
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் 75 தொடக்கப் பள்ளிகளும், 16 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் நடுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியும் அடங்கும். இப்பள்ளியில் படிக்கும், தாசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 2.5 கி.மீ. தொலைவில் இருந்து நாள்தோறும் பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படாததாலும், சில நேரங்களில் பேருந்து வராததாலும் மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்லமுடியவில்லை. கூலித் தொழிலாளிகளான மாணவர்களின் பெற்றோர்களிடமும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சொந்தமாக வாகனங்கள் இல்லை.
இதனால், பேருந்து வராவிட்டால் மாணவர்களால் பள்ளிக்குச் சென்றுவர முடியாது. இதனால் சில நேரங்களில் இடைநிற்றல் பிரச்சினையும் ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு தடையின்றி வந்து செல்ல வசதியாக, ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து நடுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:
எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல்8-ம் வகுப்பு வரை 63 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தாசபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்து வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். இடைநிற்றல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்கள் சார்பில் எங்கள் சொந்த செலவில் வாடகைக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். தாசபாளையம் பகுதியைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் இப்போது சிரமமின்றி வந்து செல்கின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நடுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் இந்த சிறப்புஏற்பாட்டை எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா, வட்டாரக் கல்வி அலுவலர் ரங்கராஜ், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர். அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,
‘பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவதிலும், பொதுமக்கள் பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குச் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதிலும் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கிறோம். பேருந்துவரும் என்று நம்பி காத்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சற்று முன்னதாகவே புறப்பட்டு, நடந்து சென்று வருகிறோம். ஆனால் மாணவர்கள் சிறு குழந்தைகள் அவர்களால் கரடு, முரடான சாலையில் அவ்வளவு தொலைவுக்கு பள்ளிக்குச் சென்று வர இயலாது. இதனால் குறித்த நேரத்துக்கு பேருந்து வராத நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டியநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம். இப்பகுதியில் குறைந்தபட்சம் சிற்றுந்துகளை இயக்குவதற் காவது அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.