

10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஓசூர் பகுதியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓசூர் வித் யூ கல்வி மற்றும் சமூகஅறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசுப் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையான சுற்றுச்சூழலை பேணிக்காப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திறன் மேம்பாட்டு பயிற்சி
இதன் ஒரு பகுதியாக கெலமங்கலம் ஒன்றியம் டி.கொத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.
இம்முகாமில் பயிற்சியாளர் பி.செல்வராஜ் பங்கேற்று மாணவ, மாணவிகள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்தும், குழுவாக இணைந்து படிப்பது குறித்தும், தேர்வுநேரத்தில் கேள்விகளை பயமின்றி எதிர்கொள்ளும் முறைகள் உள்ளிட்ட தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதேபோல், தளி ஒன்றியம் மலைப்பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளான நாட்றாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கேரட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, தொட்டமஞ்சு அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மேலும், மலைக்கிராமங்களான நாட்றாம்பாளையம், கேரட்டி, தொட்டமஞ்சு ஆகியகிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.