

காணும் பொங்கலை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாகூர் வரலாற்று ஆசிரியர் வடிவமைத்த மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துக்குமார்.
ஓவியம் வரைவது, மணல் சிற்பங்களை உருவாக்குவது ஆகியவற்றில் ஆர்வமுடைய இவர், ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் நாகை புதிய கடற்கரையில் மணற்சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.
அதன்படி, காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-வது ஆண்டாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாகை புதிய கடற்கரையில் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து மணல் சிற்பங்களை முன்னாள் மாணவர்களுடன் இணைந்து வடிவமைத் தார்.
இதில், யானை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, கரடி, டைனோசர் போன்ற வனவிலங்குகளின் உருவம் இடம் பெற்றிருந்தன. மேலும், புவி வெப்பமயமாதல், தாராசுரம் கோயில் சிற்பங்கள், டைனோசர் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாகூர் வரலாற்று ஆசிரியர் முத்துக்குமார் தத்ரூபமாக வடிவமைத்த விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.