

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் இன்றும், நாளையும் (திங்கள், செவ்வாய்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு ஜனவரி 6 முதல் 13 வரையிலான நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டம் (தத்கல் திட்டம்) ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கல்வி மாவட்டங்கள் வாரியாகசேவை மையங்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் ( www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.
தேர்வுக்கட்டணம் ரூ.125. இத்துடன் தத்கல் கட்டணமாக ரூ.500, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆக மொத்தம் ரூ.675-ஐ சேவை மையத்தில் ரொக்கமாக செலுத்திவிடலாம். விண்ணப்பித்த உடன் தரப்படும் பதிவெண் அடங்கிய சிலிப்பை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வு கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்கான நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தாங்கள் விண்ணப்பித்த பாடங்கள் தான் பதிவு சிலிப்பில் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறதா என்பதை தேர்வர்கள் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். தத்கல் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.