

பள்ளி மாணவர்களிடையே புதிய அறிவியல் கண்டு பிடிப்புக்கான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து மாநில அளவில் ‘இன்ஸ்பையர்’ விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2019-20ம் கல்வி ஆண்டுக்கான ‘இன்ஸ்பையர்’ விருதுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் படைப்புகளுக்கான போட்டிகள் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
இந்த கணகாட்சியில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. தந்தை ஹென்ஸ் ரோவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மாவட்ட அளவிலான இந்த கண்காட்சியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் பள்ளிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.