

கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் எனப் பாரம்பரிய கலைகளுடன் மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சு.கண்ணையா விழாவைத் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை பி.முத்துலட்சுமி வரவேற்றார்.
விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகம் முன்பு கரும்பு, மஞ்சள் குலை, காய்கறிகள்வைக்கப்பட்டு, மண் பானையில் மாணவிகள் பச்சரிசியிட்டு பொங்கல் வைத்தனர். மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி பொங்கலோ, பொங்கல் என கோஷமிட்டனர்.
தொடர்ந்து மாணவிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், மாணவர்களின் ஒயிலாட்டம் ஆகியவை நடந்தன. பின்னர், பம்பரம் சுழற்றியும், கோலி குண்டு விட்டும், வானில் பட்டம் விட்டும் விளையாடினர். பின்னர் உறியடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு சிலம்பாட்டப் போட்டிகளும், மாணவிகளுக்கு கோலம், ரங்கோலி, பல்லாங்குழி போட்டிகளும் நடத்தப்பட்டன. விழாவில் கூட்டுக் குடும்ப உறவின் மேன்மையை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் கலந்து கொண்டனர்.