

வத்தலகுண்டில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு ரோட்டரி சங்கம் சார்பில், தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களுக்கு ஆளுமைத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சிப் பட்டறை வத்தலகுண்டுவில் நேற்று நடைபெற்றது.
இதற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் நஜ்முதீன், முருகபாண்டியன், பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலாளர் மாதவன் வரவேற்றார். பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தென்மண்டல ஆளுமைத் திறன் மேலாண்மை பயிற்றுநர்கள் மீனா சுப்பையா, லீலாவதி ஆகியோர் மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.
தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து விளக்கினர். பயிற்சி முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ரோட்டரி சங்கநிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ரோட்டரி சங்க பொருளாளர் காசி நன்றி கூறினார்.